Wednesday, July 26, 2023

TNPSC தமிழ் மற்றும் UNIT8 உள்ள முக்கிய பாடப்பகுதி சங்க இலக்கியம்

 

tnpsc sanga kala ilaikkiyam

TNPSC தமிழ் மற்றும் UNIT8 உள்ள முக்கிய பாடப்பகுதி சங்க
கால இலக்கியம்


       பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது. அதனால் அம்மொழி நீண்டகால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும்.

சங்க கால இலக்கியம்

     சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. 

சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.

முதற்சங்கம்

      கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

இடைச்சங்கம் 

     தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற 3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

மூன்றாம் சங்கம் 

       கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. 

இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை  நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

      பின்வரும் பதிவுகளில் இவற்றை பற்றி அறிவோம்.

No comments:

Post a Comment