Sunday, February 5, 2017

பொது அறிவு | ஜல்லிக்கட்டு போராட்டம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தின் பாரம்பரியமான வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி  வைத்தது. தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்தியாகவேண்டுமென பெரியதொரு வியக்கவைக்கும் போரட்டத்தை தமிழகத்தில் நடத்தி காட்டினர். இறுதியாக இளைஞர்கள் போராட்டம் வென்றது.

தன் கொம்புகளால் முட்டிக்கொல்ல வரும் காளையைக் கண்டு அஞ்சும் ஆண் மகனை, இடையர் குலத்தைச் சேர்ந்த பெண், இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறவியிலும் மணம்புரிய விரும்ப மாட்டாள் என்று சங்க  இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை பாடல் கூறுகிறது.

ஆக, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'ஏறுதழுவுதல்' இருந்ததென்பது புலனாகிறது. குறிப்பாக கால்நடை வளர்ப்பையே தம் குலத்தொழிலாகக் கொண்ட ஆயர்குலத்தில் ஏறுதழுவுதல் திருமணத்தை நிச்சயிக்கும் சடங்காக, காதலியை அடையும் வழிமுறையாக திகழ்ந்துள்ளது. ஏறுதழுவுவதற்கு முந்தைய தினம் ஏறுதழுவத் தூண்டியோ அல்லது ஏறுதழுவிய அன்று தம் காதலர் வெற்றிபெற்றதையோ வாழ்த்திப்பாடும் 'குரவைக்கூத்து'ம் இதனை உறுதி செய்கிறது. புராண நாயகர்களில் ஒருவனும் இடையர்குலத்தைச் சேர்ந்தவனுமான கிருஷ்ணன், நப்பின்னையை மணக்க, ஏறுதழுவி வெற்றிபெற்றதாக கதையொன்றும் உண்டு.

TNPSC GK Click HERE

நவீன இலக்கியத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட சி. சு. செல்லப்பாவின் 'வாடிவாசல்' குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

புதுதில்லி தேசிய கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துச் சமவெளி நாகரிக முத்திரையொன்றில், தன்னை அடக்க முயலும் வீரரை, காளை தூக்கியெறியும் காட்சி உயிர்ப்புடன் காணப்படுவது பழங்காலம் தொட்டே ஏறுதழுவுதல் நடந்துள்ளது என்பதற்கான தொல்லியல் சான்றாகும்.

எனினும் இன்று ஜல்லிக்கட்டு என்று பிரபலமாகக் கூறப்படும், காளையடக்கும் போட்டி நூற்றாண்டுகளுக்கும்  மேலாக நடந்துவருவதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களிலேயே ஜல்லிக்கட்டு முக்கியமாக நடைபெற்று வருகிறது.

ஏன் இந்த விளையாட்டுக்கு ஜல்லிக்கட்டு என்னும் பெயர் வந்தது? இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. விழாவின்போது காளையின் கழுத்தில் 'சல்லி'  எனும் புளியம் கொம்பிலான வளையமொன்றை அணிவர். எனவே சல்லி வளையம் அணிவிக்கப்பட்ட காளையை அடக்கும் நிகழ்வுக்கு சல்லிக்கட்டு எனப்பெயர் வந்தது. இன்னொரு காரணம்,  மாட்டின் கழுத்தில் அதை அடக்குபவருக்கான பரிசுத் தொகையைக் கட்டுவர். முன்பு புழக்கத்திலிருந்த சல்லிக்காசு பரிசுமுடிப்பாக கட்டப்பட்டதால் அதற்கு சல்லிக்கட்டு எனப் பெயர் வந்ததாம். காலப்போக்கில் சல்லிக்கட்டு - ஜல்லிக் கட்டாகத் திரிந்தது.      

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலமானதாகும். இப்போட்டியைக் காண்பதற்கென்றே உலகெங்குமிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து குவிகிறார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பெரையூர் போன்ற இடங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தா மலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு பிரசித்தம்.

ஜல்லிக்கட்டும் மல்லுக்கட்டும்  

   ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாக முயன்று வந்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியும், விலங்குகளிடம் பெரிதும் அன்பு பாராட்டுபவருமான மேனகா காந்தியிடமிருந்து முதல் இடையூறு எழுந்தது. 2008 ஜனவரி மாதம் பொங்கல் விழாவுக்கு சில நாட்களுக்கு முன் விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.

 எனினும் தமிழக அரசு மறுமுறையீடு  செய்து ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போட்டி நடத்த அனுமதிபெற்றது. அத்தோடு, 'தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009' சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை அட்டவணைப்படுத்தியது.

மேனகா காந்தி தொடர்ந்த வழக்கில் இந்திய நீலச்சிலுவைச் சங்கம் (Indian Blue Cross Society), விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals - PETA)  போன்ற அமைப்புகளும், விலங்குகள் நலனில் ஆர்வமுள்ளவர்களும் தம்மை இணைத்துக்
கொண்டு சட்டரீதியான தாக்குதலை வேகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டின் மீதான இரண்டாவது தாக்குதல், 2011-இல் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டில் கூடுதலாக 77 விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி ஆணையிட்டபோது எழுந்தது. 2010 நவம்பர் 27-இல் நீதிபதி ஆர். ரவீந்திரன், ஏ. கே. பட்நாயக் அடங்கிய அமர்வு இந்நெறிமுறைகளை வகுத்தளித்திருந்தது.

அதன்படி, ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்ட ஆட்சியர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்  விலங்குகளனைத்தும் விலங்குகள் நலவாரியத்தில் பதிவுசெய்வதையும், போட்டியை விலங்குகள் நலவாரிய பிரதிநிதி ஒருவர் கண்காணிப் பதையும் உறுதி செய்யவேண்டும்.

 போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் அனுதிபெறவேண்டும்.

 காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறையாக பதிவுசெய்யப்படவேண்டும்.

 காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல், சேறு சகதிபூசி வெறியூட்டு தல் கூடாது.

 ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
 காளைகள் ஓடவும் வீரர்கள்  அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் என்பவை அந்நெறிமுறைகளுள் சிலவாகும்.

நீதிமன்ற நெருக்கடி போதாதென்று மத்திய அரசின் அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரிடமிருந்து இன்னொரு இடையூறு எழுந்தது. சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை கூண்டிலடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக்கூடாதென்பது சட்டம். இதில் ஒரு திருத்தம் செய்து, காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்தார் முன்னாள் மத்தியஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

ஏற்கெனவே, நீதிமன்றக் கெடுபிடி, போதாதற்கு ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் போட்டியில் காயமடைபவர்கள், பலியாகிற வர்களின் மருத்துவச் செலவுக்காகவும் இரண்டு லட்ச ரூபாய் வைப்புத்தொகை செய்யவேண்டுமென்கிற கெடுபிடி இவற்றால் சோர்ந்து போயிருந்த ஜல்லிக் கட்டு ஆர்வலர்களை இந்த சட்டத்திருத்தம் மேலும் சோர்வடைய வைத்தது.

எனினும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013-இல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்தது தமிழக அரசு. விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களின் பிரதிநிதி ஒருவர் அவசியம் ஜல்லிக்கட்டில் பார்வையாளராக இடம்பெறவேண்டு மென்ற நெறிமுறையை அவர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொண்டனர். கடந்த
2013-ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களான டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே இருவரும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுகளைப் பார்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.    

இந்த அறிக்கைகள் காளையடக்கும் போட்டிகளின்போது காளைகளை வாடிவாசலிலிருந்து தள்ளிவிடுதல், கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற துன்புறுத்தும் நிகழ்வுகள் நடப்பதை பதிவு செய்தனர்.

தப்பியோட முயன்ற காளையொன்றின் கால் முறிந்ததையும், மிரண்டோடிய காளையொன்று பேருந்தில் மோதி இறந்தததையும் பதிவுசெய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசு, ""விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதாகவும், போட்டிகளை மேலும் முறைப்படுத்தலாம், முழுமையாக தடைவிதிக்கக்கூடாதென வாதிட்டது.''

விலங்குகள் நல வாரியம் ""பட்டிகளில் மாடுகள் வதைக்கப்படுகின்றன; தேவையின்றி துன்றுத்தப்படுகின்றன. மிருகவதை தடைச் சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவது குற்றம்'' என வாதங்களை முன்வைத்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன்  மற்றும் பினாகி சந்திர போஸ் அடங்கிய அமர்வு, ""மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை மனிதர் களுடனோ, இதர விலங்குகளுடனோ சண்டைபோடத் தூண்டக்கூடாது. ஒவ்வொரு ஜீவராசியும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. இதனை அரசியல் சாசன உரிமையாக கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

எந்தவொரு விலங்கும் துன்புறுத்தப்படாமலிருப்பதை விலங்குகள் நலவாரியம் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கையளிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தினால் கூடுதல் அபராதம், தண்டனை வழங்கும் வகையில் திருத்தங்கள்   கொண்டுவரவேண்டும். தமிழக அரசின் 2009-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடைச் சட்டத்தை மீறுவதால் இச்சட்டம் ரத்துசெய்யப்படுகிறது. தமிழகம் உட்பட நாட்டின் எந்தப் பகுதியிலும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது'' என தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலிலிருந்து காளையை நீக்கி, 2016 ஜனவரி 7-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சகம் உத்தரவு வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழக அரசு சார்பில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. 2016 டிசம்பர் மாதம் இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப். நாரிமன் அடங்கிய அமர்வு ""தமிழக அரசு இயற்றியுள்ள 2009-ஆம் ஆண்டு சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடைச் சட்டம் 1960-க்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-ஐ இழுக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது முழுக்க முழுக்க மனிதனின் பொழுதுபோக்கிற்காக காளையை பயன்படுத்தும் நிகழ்ச்சி. இதற்கும் மத வழிபாட்டிற்கும் தொடர்பில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க முடியாது'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ம் தேதி வாடிவாசலிலில் காளைகளை திறந்துவிட மறுத்ததால் அலங்காநல்லூரியில் தொடக்கப்புள்ளியாக தொடங்கிய ஜல்லிலிக்கட்டுப் போராட்டம்  தமிழகம் முழுவதும் பரவியது.

ஜல்லிலிக்கட்டுக்கு ஆதரவாக  சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிலிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா  அமைப்புக்கு எதிராகவும்  அனைவரும் ஒருமித்த குரலிலில் விண் அதிர கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாகவும் சென்றனர்.

தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டனர். பொதுமக்கள், வியாபாரிகள், பல்வேறு அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், ஜல்லிலிக்கட்டு ஆர்வலர்கள் என அனைவரும் மெரினா கடற்கரையை நோக்கி வந்தனர்.

இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில்  போராட்டங்கள் நடந்தது.

தமிழகம் மட்டுமல்லாது, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட, தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஜல்லிலிக்கட்டுக்கான தடையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிலியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜல்லிலிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசால் இயற்றப்படும் அவசர சட்டங்கள், பொதுப்பட்டியலிலில் இடம் பெற்றவை மற்றும் இடம்பெறாதவை என இருவகைகள் கொண்டவை. இதில் ஜல்லிலிக்கட்டு மீதான சட்டம் பொதுப் பட்டியல் எண்-3 இல் இடம் பெற்றுள்ளது.

எனவே, இதை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின் தற்போது இயற்றப்படுகிறது.

அப்பட்டியலில் 17 -வது இடத்தில் உள்ள மிருகவதை அவசர சட்டம் 1960-இல் திருத்தம் செய்து இந்த அவசரசட்டம் இயற்றப்படுகிறது.

மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவரின் உத்தரவு ஜனவரி 20-இல் பெறப்பட்டது.

அவசர சட்டத்திற்கான ஒப்புதல் தமிழக ஆளுநர்  (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் வழங்கினார்.  இதன் அடிப்படையில் ஜனவரி 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அலங்காநல்லூரில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தார்.

No comments:

Post a Comment