காலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | தமிழகம்

தமிழகம்:

ஜனவரி
8 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்க இயக்குநரகம், 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
11 தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட சீமென்கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துகுடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.87.42 கோடியில் கட்டப் ட்ட 292 கட்டடங்கள், 6 அம்மா மருந்தகங்கள், 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள், 13 பண்ணை பசுமை கடைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
12 மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மீண்டும் தடை விதித்தது.
30 சென்னை மாநகராட்சியை, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதனை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி
8 108 ஆம்புலன்ஸ் சேவையே மேலும் மேம்படுத்தும் வகையில் ரூ. 70 லட்சம் மதிப்பில் 41 மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13 சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஏழை மக்களும் வாங்கிப் பருகும் வகையில் அம்மா குடிநீர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
18 சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
20 தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
21 சட்டப்பேரவையில் தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார்.
மார்ச்
1 அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
5 தனியார் பள்ளிகளில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல்
1 முறைகேடு வழக்கில் கிரானைட் அதிபருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு: மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரபூபதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
4 தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து.
10 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, இலவச இணைய சேவை உள்பட 100 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
14 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "வெளிச்சம்' தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
23 தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
26 பள்ளிகளில் திருக்குறள் கட்டாயப் பாடம்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
26 ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது சென்னை செஷன்ஸ் நீதிமன்றம்.
மே
1 சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அசுதோஷ் சுக்லா நியமனம்.
7 புற்று நோய் மருத்துவ நிபுணர் ரோஹிணி பிரேம்குமாரி (67) எழும்பூர் காந்தி-இர்வின் சாலையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
13 "கன்யாகுமரி' என்ற ஊரின் பெயர் ஏற்கெனவே அரசிதழில் இருந்தபடி "கன்னியாகுமரி' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
14 திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
16 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு; 74 சதவீத வாக்குகள் பதிவு.
17 கோடை வெப்பம் தணிந்து தமிழகத்தில் பலத்த மழை சென்னையில் 127 மி.மீ. மழை பதிவாகியது.
19 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியீடு. மீண்டும் அதிமுக வெற்றி.
19 திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராக 13-ஆவது முறையாக வெற்றி. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
20 சட்டப்பேரவை அதிமுக தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.
25 தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் உள்பட 5 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.
31 காசோலை மூலம் வங்கிப் பணத்தை மோசடி செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2.40 கோடி அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜூன்
1 பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் சீருடைகளை வழங்கி தொடக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
8 தமிழக தலைமைச் செயலாளராக பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அந்தப் பதவியிலிருந்த கே.ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
20 கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
21 வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளைக் கடத்தியதாக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளனை போலீஸார் கைது செய்தனர்.
25 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக் கொண்டார்.
25 தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்விக் குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி ரூ.82 கோடியை பறிமுதல் செய்தனர்.
28 காரைக்கால் ஐ.டி.நிறுவன ஊழியர் வினோதினி மீது திராவகம் வீசிக் கொன்ற இளைஞர் சுரேஷ்குமாருக்கு காரைக்கால் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
ஜூலை
13 8 ஆண்டுகளாக பல கட்ட விசாரணையில் இருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கி வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
19 சோலார் மின்தகடு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயருடன் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் ஊழலில் தொடர்பு என்ற தகவல் வெளியானது.
22 இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 என்ற விமானம் சென்னையிலிருந்து 29 பேருடன் அந்தமானுக்கு பயணிக்கும் வழியில் மாயம்.
24 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் "வைஃபை' சேவை அறிமுகம். முதல்முறையாக ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே மனித கழிவுகளற்ற பசுமை வழித்தடம் தொடக்கம்.
27 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவாக 7 அடி வெண்கலச் சிலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு.
ஆகஸ்ட்
1 மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்---அதிமுக பொதுச் செயலரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு
9 சேலத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு சென்னை வந்த ரயிலில், பெட்டியின் மேற்கூரையை உடைத்து ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
10 கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-ஆவது யூனிட்டை பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
12 25 மாவட்டங்களில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு 80 பாலங்கள், 142 கிமீ மாநில சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.900 கோடி அறிவிப்பு.
15 70-ஆவது சுதந்திர தின விழாவில் சண்முகம், ஜெயந்தி ஆகியோருக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவிப்பு.
17 சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட 79 பேரை 1 வாரத்துக்கு தாற்காலிக நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவு.
26 பெண்கள் முன்னேற்ற நல்லெண்ணத் தூதராக திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷை ஐ.நா. சபை அறிவித்தது.
செப்டம்பர்
1 ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கென ரூ. 403 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
2 மகாராஷ்ட்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பு.
7 சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே ராஜேந்திரன் டிஜிபி ஆக பொறுப்பேற்பு. மீண்டும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் பொறுப்பேற்பு.
9 விவசாய நிலங்களை அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றவும், மாற்றிய வீட்டு மனைகளுக்கு பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் பத்திரப் பதிவுத் துறைக்கு அதிரடி உத்தரவு.
12 முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, கீர்த்திலால் ஆகியோரது வீடுகள், நகை கடை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை.
15 மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிப்பு.
16 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக சு.திருநாவுக்கரசர் பொறுப்பேற்பு.
18 சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை.
21 மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான இரண்டாம் வழித்தடத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
22 காய்ச்சல் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
25 முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என அறிவிப்பு.
30 முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல் சென்னை வருகை.
அக்டோபர்
5 சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் முன்னிலையில் 15 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது.
11 முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருடைய இலாகாக்களை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களையும் அவரே நடத்துவார். ஜெயலலிதாவே முதல்வராக நீடிக்கிறார் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
13 சென்னை குடிநீர் வாரியத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்து ஏற்படுத்தியதில், கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14 மூலிகை பெட்ரோல் தயாரித்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் பெட்ரோலியப் பொருள்களின் கலவையையை மூலிகை பெட்ரோல் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி ரூ.2.27 கோடி சம்பாதித்தது உறுதி செய்யப்பட்டது.
20 சிவகாசி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அருகில் இருந்த ஸ்கேன் மையத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
21 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக திமுக ஆட்சியில் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுவிக்கப்பட்டார்.
நவம்பர்
2 சென்னை மெளலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு 2014-ஆம் ஆண்டு இடிந்து விழுந்து பலரைப் பலி கொண்ட சம்பவத்தில், தொடர்புடைய மற்றொரு 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு நவீன முறையில் இடித்துத் தகர்க்கப்பட்டது.
5 ஒப்பந்தக்காரரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
10 6 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் எதிர்த்துப் போராடிய, மீத்தேன் மற்றும் பாறை எரிவாயு திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
16 சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஆர்.எம்.டி.டீக்கா ராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாய் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
21 பல மாதங்களாக தலைமறைவாக இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
22 தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
24 மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் நிர்வாகியாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
டிசம்பர்
1 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 18 பேர் பலி.
5. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 6 முறை முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா(68), சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு, 75 நாள்களுக்குப் பின் மறைந்தார்.
6 அதிமுக மூத்த நிர்வாகியும், தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் (நள்ளிரவு 1 மணியளவில்) தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
8 மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் நாகரத்தினம், எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
9 6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
12 கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் தீவிரமான புயல் என்று கூறப்படும் வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. அப்போது 114 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 மாவட்டங்களில் 29 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.
12 மதுரை கிரானைட் ஊழல் வழக்கில் தொடர்புடைய ரூ. 528 கோடி மதிப்புள்ள சொத்துகள், 1625 அசையா சொத்துகள், நிரந்த வைப்புத் தொகை ஆகியவற்றை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
21 தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது மகன் விவேக், உறவினர் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய நோட்டுகள், 5 கிலோ தங்கம், ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
21 எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.
23 தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பினார்.
23 புதிய தமிழக தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்.
27 நான் தலைமைச் செயலராக நீடிக்கிறேன், தலைமைச் செயலகத்தில் நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ் பரபரப்பு பேட்டியளித்தார்.

Post a Comment

0 Comments