Sunday, February 16, 2020

குரூப் 4 வினாத்தாள் மோசடியில் பரபரப்பு விசாரணை

குரூப் - 4' தேர்விற்கான விடைகளை தயாரிக்கும் வகையில், வினாத்தாள் முன்கூட்டியே, 'லீக்' ஆனது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 4' தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள் நவம்பரில் வெளியாகின. தேர்வு முடிவுகளில், முன்னிலை பெற்றவர்கள் பலர், முறைகேட்டில் ஈடுபட்டதால், தேர்ச்சி பெற்றது அம்பலமானது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குரூப் - 4 தேர்வு மட்டுமின்றி, குரூப் - 2 ஏ மற்றும், வி.ஏ.ஓ., தேர்விலும், முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிகள் தொடர்பாக, ௪௦க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு முறைகேட்டில் விடைத்தாளை திருத்துவதற்கு உதவிய, ஆசிரியர் செல்வேந்திரன், நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., திட்டமிட்டுள்ளது. இந்த செல்வேந்திரன் தான், சரியான விடைகளை எழுதி, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தான், விடைத் தாள்களில், ஜெயகுமார் விடைகளை மாற்றி எழுதியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செல்வேந்திரன், டி.என்.பி.எஸ்.சி.,யின் சில தேர்வு மையங்களில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.

அந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் குறித்தும், போலீசாரும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கான சரியான விடையை தயார் செய்ய ஏதுவாக, ஆசிரியர் செல்வேந்திரனுக்கு, தேர்வு நடக்கும் முன், வினாத்தாள் கிடைத்துள்ளது.குரூப் - 4 தேர்வு நடந்த நாளன்று, தேர்வு முடிந்து, தேர்வு மையங்களில் இருந்து, தேர்வர்கள் வெளியே வரும் முன், தேர்வுக்கான முழு விடைக் குறிப்பும், செல்வேந்திரன் வாயிலாக, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் விசாரணை துவங்கி உள்ளது. வினாத்தாள் லீக் ஆனது எப்படி என்றும், வினாத்தாள் திருடப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும், போலீசாரும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினாத்தாளை தயாரித்தவர்களே, லீக் செய்தனரா; வினாத்தாள் இறுதி செய்யப்பட்ட இடத்தில் லீக் ஆனதா; அச்சகத்திலிருந்து லீக் ஆனதா; தேர்வு மையத்தில் இருந்து திருடப்பட்டதா; வாகனத்தில் வினாத்தாளை எடுத்து செல்லும் போது திருடப்பட்டதா என, பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment