அறிந்துகொள்வோம்: தமிழ் எண்ணியல்

இங்கு இணையத்தில் பலரும் தமிழ் எண்ணியல் பற்றி பல விவரங்களைத் தருகின்றனர். அதில் சில தவறாகவும்/ முழுமையாக இல்லாமலும் இருப்பதையும் காண்கிறேன்.

கொறுக்கையூர் காரி நாயனார் அருளிய கணக்கதிகாரப் பதிப்பிலிருந்து கீழிருப்பனவற்றைத் தருகிறேன். செய்யுளியலை ஓரளவு அறிந்தவனாகையால், பதிப்பிலிருக்கும் வெண்பாக்களைச் சீர்பிரித்தே அளிக்கிறேன். ௰௱௲௰ என்பது பழைய இலக்கிய வழக்கின்படி கோடி என்பதை நினைவிற் கொள்க.

(1)
கோடி யுடன்சங்கம் விந்தம் குலம்பதுமம்
நீடு சமுத்திரமே நேரிழையாய் - ஓடிவரும்
வெள்ளம் பிரளயம் யோசனைகற் பம்விகற்பம்
கள்ளவிழும் பூங்குழலாய் காண்.

கோடி ௰௱௲௰ கொண்டது = மகாகோடி
மகாகோடி ௰௱௲௰ கொண்டது = சங்கம்
சங்கம் ௰௱௲௰ கொண்டது = மகாசங்கம்
மகாசங்கம் ௰௱௲௰ கொண்டது = விந்தம்
விந்தம் ௰௱௲௰ கொண்டது = மகாவிந்தம்
மகாவிந்தம் ௰௱௲௰ கொண்டது = சமுத்திரம்
சமுத்திரம் ௰௱௲௰ கொண்டது = மகாசமுத்திரம்
மகாசமுத்திரம் ௰௱௲௰ கொண்டது = வெள்ளம்
வெள்ளம் ௰௱௲௰ கொண்டது = மகாவெள்ளம்
மகாவெள்ளம் ௰௱௲௰ கொண்டது = பிரளயம்
மகாபிரளயம் ௰௱௲௰ கொண்டது = யோசனை
மகாயோசனை ௰௱௲௰ கொண்டது = கற்பம்
கற்பம் ௰௱௲௰ கொண்டது = மகாகற்பம்
மகாகற்பம் ௰௱௲௰ கொண்டது = விகற்பம்
விகற்பம் ௰௱௲௰ கொண்டது = மகாவிகற்பம்.

(2)
மாகமும் தன்மனையும் அர்புதமும் உற்பலமும்
ஏகம னந்தமுடன் வேணுமாந் - தோகாய்
சலஞ்சலமும் மந்தரையும் தாரகையும் மேரு
வலம்புரிமின் பின்புலையோர் மட்டு.

மகாவிகற்பம் ௰௱௲௰ கொண்டது = மாகம்
மாகம் ௰௱௲௰ கொண்டது = மகாமாகம்
மகாமாகம் ௰௱௲௰ கொண்டது = தன்மனை
தன்மனை ௰௱௲௰ கொண்டது = மகாதன்மனை
மகாதன்மனை ௰௱௲௰ கொண்டது = அர்புதம்
அர்புதம் ௰௱௲௰ கொண்டது = மாகார்புதம்
மகார்புதம் ௰௱௲௰ கொண்டது = உற்பலம்
உற்பலம் ௰௱௲௰ கொண்டது = மகாஉற்பலம்
மகாஉற்பலம் ௰௱௲௰ கொண்டது = வேணு
வேணு ௰௱௲௰ கொண்டது = மகாவேணு
மகாவேணு ௰௱௲௰ கொண்டது = சலஞ்சலம்
சலஞ்சலம் ௰௱௲௰ கொண்டது = மகாசலஞ்சலம்
மகாசலஞ்சலம் ௰௱௲௰ கொண்டது = மந்தாரை
மந்தாரை ௰௱௲௰ கொண்டது = மகாமந்தாரை
மகாமந்தாரை ௰௱௲௰ கொண்டது = மேரு
மேரு ௰௱௲௰ கொண்டது = மகாமேரு
மகாமேரு ௰௱௲௰ கொண்டது = வலம்புரி
வலம்புரி ௰௱௲௰ கொண்டது = மகாவலம்புரி.

Post a Comment

0 Comments