இலக்கணம் என்ற இன்பக்கடல்

தமிழன்பர்களே...

நம்முடைய தமிழிலக்கணம் என்பது 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. மனிதனுடைய வாழ்க்கை நெறியை அடிப்படையாகக் கொண்ட இலக்கணம் நமது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற திணைகளின்படி அந்தந்த நிலம்வாழ் மக்களின் வாழ்வியலையும் சொல்லும் இலக்கண நம்முடையது; தனித்துவம் வாய்ந்தது. 

இலக்கணம் என்பதென்ன அது ஒரு நெறிமுறை, இப்படி பாதையில் நடந்தால் ஊர் போய்ச் சேரலாம் என்ற ஒரு வரைமுறை. சிலர் தனியாக யாரும் செல்லாத வழியில் போய், பலரும் பின்பற்றினால், புதுப்பாதை உருவாகுதல் போல, எல்லோருடைய ஒப்புதலுக்குப் பின் புத்திலக்கணமும் உருவாகும். கீழ் வரும் திரைப்படப் பாடலைப் பாருங்கள் இந்த அழகான அறிவுரை வாழ்வியலுக்கு மட்டுமல்ல இலக்கிய இலக்கணத்தும் பொருத்தமானதே!

கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

ஒரு மொழி தோன்றி, இலக்கியம் தோன்றி அதன் பின்னர் தான் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். யாரும் இலக்கணத்தை முதலில் வகுத்துக் கொண்டு இலக்கியம் படைக்க முயலுவதில்லை. முதலில் புதுப்பாக்கள், துளிப்பாக்கள், நவீனப்பாக்கள், வசனப்பாக்கள் இப்படிப்பட்ட பாடல்களைப் படைக்கும் பாவலர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  கவித்துவம் இருக்கின்ற, ஒரு அழகான, ஆற்றொழுக்கான நடையும், சந்தமும் இருக்கின்ற மரபுசாரா பாடல்களும் கவிதையே;  அதில் எந்த ஐயமும் தேவையில்லை.

ஆனால் நம்முடைய இலக்கியமும், இலக்கணமும் அறியாமல், நாம் எழுதும் பாக்கள், சுவைஞர்களிடத்து ஒரு மௌன வாசிப்பைத் தான் ஏற்படுத்தும். அதாவது படிப்பார்கள்; சுவைப்பார்கள்; நன்றாக இருப்பின் நன்று என்பார்கள்: இல்லையெனில் கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள்! படிப்பவரும் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கின்ற வாசிப்பை உண்டாக்குவது மரபியற் கவிதைகள்! நீங்கள் மரபுக்கவிதை எழுதுவதற்காக இலக்கணம் கற்க வேண்டாம், இலக்கணம் கற்றபின் எல்லோருடைய பாக்களையும் சுவைத்துப் பாருங்கள்;  நான் சொல்ல வந்தது புரியும்.

இன்னும் சிலர் சொல்வதுண்டு! எண்ணியதை எழுதினோமா, அச்சில் இட்டோமா என்றில்லாமல், என்னடா இது உள்ளத்தில் முகிழும் கவிதைப் பூவை அப்படியே தர முடியாமல் நம்மை நாமே மொழியால் கட்டிக் கொண்டு, அசையாம் சீராம், எதுகையாம் மோனையாம், இயைபாம், தளையாம், தட்டாம், எதற்கிந்த வேண்டாத வேலை? அந்தத் தமிழன்பர்க்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கவிதைக்கு மிக முக்கியமானது முதலில் பொருள்நயமும் ஓசைநயமும்; அவற்றில் பொருள்நயம் மட்டுமிருந்து ஓசைநயம்  இல்லாவிடில் அது வெறும் உடைத்துப் போட்ட உரை நடை என்றாகிவிடும்.

மேலும் நம்முடைய இலக்கணக் கடை என்பது மிகவும் பெரியது. அதில் எதுகை, மோனை, ஒரு அடிக்கு எத்தனை சீர் (சொல்) என்று மட்டுமே பார்க்கும் குறள்வெண்செந்துறையும்,  உண்டு. கடுமையாக ஓரடி எழுத்தெண்ணிக்கை, ஒத்த அளவடிகள், இவை பார்த்து எழுதப்படும் கட்டளைக் கலிப்பாக்கள், கலித்துறைகளும் உண்டு.

நேரொன்றிய ஆசிரியத்தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும் கொண்டு, ஓரடிக்கு நான்கு நான்கு சீர்களுடன் அகவற்பா இலக்கணம் பொருந்தவரும் நிலைமண்டில அகவற் பாக்கள், அடிக்கு நான்கு நான்கு சீர்களுடன் ஈற்றயற் சீர் மூன்று சீர்களுடன் வரும் நேரிசை அகவற்பாக்கள். இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் பொருந்த, ஒன்றே முக்காலடி குறள்பாக்கள், இரண்டே முக்காலடி சிந்தியல் வெண்பாக்கள், 12 அடிகள் கொண்ட பஃறொடை (பல தொடை) வெண்பாக்கள், 12 அடிக்கு மேல் 1000 அடிவரை வரும் கலிவெண்பாக்கள். காய்முன்நிரை எனப்படும் கலித்தளை விரவிவரும் கலிப்பாக்கள், ஒன்றியவஞ்சித்தளை/ஒன்றாத வஞ்சித்தளை இவை பொருந்த கனிச்சீர் கொண்டிலங்கும் வஞ்சிப்பாக்கள்.

அப்பப்பா இவை பேராழியில்  மறைந்திருக்கும் மலையின் முகடொத்த ஒரு விளக்கமே!  கரையில்லாதக் காட்டாறும் (Wild Rivers), அணையிட முடியாத ஆழிப்பேரலையும் (Tsunami), பல நேரங்களில் அழிவையே தருவதைப் போல, ஒரு கட்டுப்பாடில்லாத இலக்கியம்/ பாடல் மொழிக்கு நன்மையை விட அதிகம் ஊறே விளைவிக்கும் என்பது என் கருத்து! நதியென்றால் கரை வேண்டும்; அணைகள் வேண்டும்; மடைகள் வேண்டும்; கால்வாய்கள் வேண்டும்; ஓடைகள் வேண்டும்; அப்படி இருந்தால்தான் மொழிப்பயிர் தங்கு தடையின்றி நலம்பயக்க, நல்விளைச்சலைத் தர முடியும்! அப்படியே ஆற்று வெள்ளத்தை வயலில் விட்டால் என்னவாகும் சொல்லுங்கள்? அதுபோலத்தான் இலக்கணங்களும், வரம்புமீறிச் செல்லும் எண்ணங்களுக்கும், ஓட்டங்களுக்கும் கட்டுப்பாடு தருவதோடு, ஒரழகினைத் தந்து மிளிர வைக்கும் செயலைச் செய்கின்றன. இது மெத்தப் படித்தவர்களுக்காக மட்டுமன்று. இலக்கணம் அறியாத அடித்தட்டு மக்கள் பாடும் கிராமிய மணம் கமழும் நாட்டுப்புறப் பாடல்களிலும் மின்னுகிறது.
பாருங்களேன் இலக்கணமே அறியாத ஒரு கிராமத்து ஆள் அளவொத்தச் சொற்களை பயன்படுத்துகையில், அடுத்திருக்கும் ஒரு கிராமத்தவர் என்னய்யா ”எகனை மொகனையா” பேசறே என்பார். தயிர் விற்கும் தயிர்க்காரி கூட "தயிர் தயிர்" என்று கூவாமல், "தயிர் வாங்கலையோஓ தயிரு" என்று ஒரு ஓகார நீட்டலுடன் தயிர் விற்பதை கண்டிருப்பீர்கள்; அதற்கு நம்முடைய இலக்கணத்தில் அளபெடை என்று பெயர்.

எதுகை மோனை அசை சீர் தளை எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது பழமொழிகளில் சில எடுத்துக் காட்டுகளை பாருங்கள் உங்களுக்கே விளங்கும்:

வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு முளைக்குமா?  (வெரை, சுரை = எதுகை)
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை (இக்கரை, அக்கரை = எதுகை)
அகத்தின் அழகு முகத்திலே தெரியும் (அகம், முகம் = எதுகை)
அடியாத மாடு படியாது பார் (அடி, படி = எதுகை)
ஆத்திலே போட்டாலும் அளந்து போடனும் (ஆறு, அள = மோனை)
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
(மாமி, மரு = மோனை மற்றும் மண்குடம்,பொன்குடம்=இயைபு)

இலக்கணக் கடலில் அளைந்து,  தமிழ் முத்தெடுப்போம்; வாரீர்!

- இரா. தியாகராஜன் 

Post a Comment

0 Comments