Monday, September 24, 2018

யாப்பு இலக்கணம் கற்றுக்கொள்வோம் வாங்க

நம்முடைய நண்பர்கள் பலருக்கும் அசை, சீர் என்றால் என்னவென்றே தெரியாதிருந்தும், தமிழிலக்கணத்தில், தமிழ்மரபில், தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த அன்புமட்டும் மேலோங்கி இருக்கிறது. படிக்கின்ற காலத்தில், சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் இளையோரின் நாடியறிந்து, மனதிற்கேற்ப தமிழிலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லையோ என்று கூட நான் எண்ணுவதுண்டு.

அன்று பள்ளியில் தேமாங்காயும், புளிமாங்காயும், எட்டிக்காயாய்க் கசந்தவர்கள் கூட இன்று தங்களுடைய பழைய நாட்களை எண்ணி மனம் உருகாமல் இருப்பதே இல்லை.  ஆகவே யாப்பிலக்கணம் என்றால் என்னவென்றே அறியாத, அல்லது மறந்தே போனவர்க்காக இதை இங்கு எழுதுகிறேன்.

இதற்கு எனக்கு பாலபாடமாக இருப்பது, அன்றைக்கு  2003இல் ஜனாப் அபுல்கலாம் ஆசாத் பாய் அவர்கள் எழுதிய அசை/சீர் என்னும் யாப்பிலக்கண பகுதி.   நானும் இணையத்தில் வந்தபின்னரே நிறை விவரங்களைக் கற்றுக் கொண்டேன். செந்தமிழ் வித்தகர் பாவலர் திரு ஹரியண்ணா, கவிமாமணி கவிவேழம் திரு இலந்தையார்,  இலக்கணச்சித்தர் பாவலர்மணி பேரா. திரு பசுபதி,  சந்தப்பாமணி பாவலர் பேரா. திரு அனந்த நாராயணன்,  போன்றவர்களின் வழிகாட்டுதல் இல்லாவிட்டால், நான் மரபறிந்த இராஜ. தியாகராஜனே இல்லை.



அசை-சீர் என்றால் என்ன?


=======================

முதலில் கானா பாடல்களில் உஸ்தாதான ஜனாப் ஆசாத் பாயின் வரிகளுடனே தொடங்குகிறேன்.  2003 ஜனவரி மாதம் வரை ஆசாத் பாய்க்கு யாப்பு என்றால் என்னவென்று அறிந்தார்? அவர் சொற்களாலேயே தருகிறேன்.



போடாதடா டூப்பு எகிறிக்குண்டா டாப்பு

சிங்கமார்க்கு கேப்பு கானாகூட யாப்பு!



இப்படி இயைபு தொடை விகற்பம் - sorry! sorry!  இந்த விகற்பம்/ பேரெல்லை/ சிற்றெல்லை எல்லாத்தையும் இத்தோட மூட்டை கட்டி வெச்சுட்டு, ஆசாத்து பாய் பாணியிலே சொல்வதே நலமென்று தோன்றுகிறது.



தமிழ் செய்யுளுக்கு முதல் பாலபாடம் அசை அப்புறம் சீர் -



சீரென்றால் கிட்டத்தட்ட ஒரு பாடலில் வருகின்ற, பொருள் தருகின்ற அல்லது தராத, ஒரு சொல் என்று விளக்கம் அளித்து விடலாம் - அதாவது ஆங்கிலத்தில் word. உரைநடையில் வந்தால் அது சொல்; பாட்டில் வந்தால் சீர்

.

ஆனால் அசை என்றால் என்ன? சொல்கிறேன். மரபெழுத நினைக்கும் பாவலனுக்கு நேர், நிரை இந்தப் பதங்கள் தான் ஆரம்ப அரிச்சுவடி. இந்த நேர் அல்லது நிரையைத்தான் ஒரு அசை அதாவது ஒரு சீரின் ஒரு பகுதியான syllable என்கிறோம். ஒரு சீரை அதாவது சொல்லை எடுத்துக் கொண்டு செய்யுள் இலக்கணப்படி அடிமட்டமாக பகுத்தால் கடைசில் அது நேராகவோ அல்லது நிரையாகவோ தான் முடியும். இதற்கும் கீழே இதை பகுப்பதில்லை. பொதுவாக செய்யுளில் ஒற்றுகளுக்கு மதிப்பில்லை.



நேர் அசை = ஒரு குறில், ஒரு குறில்+ஒற்று, ஒரு நெடில், ஒரு நெடில்+ஒற்று

===============================================================

(எ-கா)

ஒரு குறில் = இது எல்லோருக்கும் தெரிந்தது அ,இ,உ,எ முதலாக,க,கி,கு,கெ என்று அத்தனை குறிலெழுத்துகளும்.

ஒரு குறில்+ஒற்று = குறிலுடன் மெய்யெழுத்து தொடர்ந்து வருவது (கல்,வில்,சொல்,புல்)

ஒரு நெடில் = தீ, போ, ஆ, ஓ

ஒரு நெடில்+ஒற்று = தேன், வாள், ஆண், ஓர்



நிரையசை = இருகுறில், இருகுறில்+ஒற்று, ஒருகுறில்+நெடில், ஒருகுறில்+நெடில்+ஒற்று

=======================================================

(எ-கா)

இருகுறில் = திரு, மரு, அக, ஒரு

இருகுறில்+ஒற்று = தமிழ், தணல், அகல், உரம்

ஒரு குறில்+நெடில் = விளா, சிவா, அதோ, ஒரே

ஒருகுறில்+நெடில்+ஒற்று = கடாம், சயாம், அசாம், உழார்

இவ்வளவு தானுங்க.



முக்கியமாக கவனிக்க வேண்டிய விதிகள்:

====================================

அ) ஒரு சீரில் ஒரு குறில்+ஒற்று அல்லது இருகுறில்+ஒற்று வந்தால் இனி அடுத்த அசைதான். அதாவது

ஒற்று வந்தாலே அடுத்த அசையை பார்க்க வேண்டியதுதான்.

ஆ) அதுபோல ஒரு நெடில் அல்லது நெடில்+ஒற்றுக்குப் பின் அடுத்த அசைதான். அதாவது நெடிலுக்கு

அப்புறம் அடுத்த அசையைப் பார்க்க வேண்டியதுதான்.



இப்போ நேர் என்றால் என்ன? நிரை என்றால் என்ன? இது புரிஞ்சிருக்கும்.  கீழே சில எடுத்துக் காட்டுகள்:



கல்பாக்கம்(ஒரு சீர்) = கல்(நேர்)+ பாக்(நேர்+ கம்(நேர்)

முகநூல்(ஒரு சீர்) = முக (நிரை) + நூல்(நேர்)

அருளரசன் (ஒரு சீர்) = அரு (நிரை) + ளர(நிரை) + சன்(நேர்)

கோமாளி (ஒரு சீர்) = கோ (நேர்) + மா(நேர்) +ளி(நேர்)



இப்போ இந்த நேர், நிரை இரண்டும் சேர்ந்து வந்தால் அதுக்கும் பெயர்கள் உண்டு. அந்த பெயர்கள்:



தேமா = நேர்+நேர்,

புளிமா = நிரை+நேர்,

கருவிளம்=நிரை+நிரை,

கூவிளம்=நேர்+நிரை



(இந்த தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் இந்த சொற்களை அசை பிரித்தாலே அவை நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்றுதான் வருவதைப் பாருங்கள்)



இந்த தேமா, புளிமா என்கிற ஈரசைச்சீர்களை, மாச்சீர்கள் அல்லது ஆசிரிய உரிச்சீர்கள் என்கிறோம். (ஆசிரியப்பாவில் இரண்டிரண்டாக வரும் சீர்கள் இவையே! கல்பாக்கம், அருள்ரசன், கோமாளி போன்ற மூவசைச் சீர்கள் ஆசிரியப்பாவில் வருவதில்லை! வந்தாலும் மிக அருகி ஒரு மூலையில் விதிவிலக்காக)



தேமா புளிமா ஆச்சு. இவற்றை பாடலில் பாக்கலாமா?

(ஆசாத்து பாய் வழியே என்வழி அதுவும் தனிவழி!! அவர் எடுத்தாண்ட திரைப்பட பாடல்களையே பயன்படுத்துகிறேன்)



வறுமையின் நிறம் சிவப்பு - இப்ப பாக்கலாம்!

தனனா தனனா தன்னா

கவிதை உலகம் கெஞ்சும்

புளிமா புளிமா தேமா - என்ன சரிதானே



இதோ இன்னொரு பாடல்! ஆசாத் பாய் பயன்படுத்திய அதே சினிமா பாடலை காட்டாகத் தருகிறேன்!



கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

தேமா  தேமா  தேமா  புளிமா  தேமா  தேமா



கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

தேமா  தேமா  தேமா  தேமா  தேமா  தேமா



எண்ணம் என்னும் ஆசைப் படகுச் செல்லச் செல்ல

தேமா  தேமா  தேமா  புளிமா  தேமா  தேமா



பொங்கிப் பெருகும் கவிதை உள்ளம் துள்ளத் துள்ள

தேமா புளிமா புளிமா தேமா தேமா தேமா



(இந்த தமிழாசிரியர்கள் சினிமா பாட்டை வெச்சுகிட்டு அலகிட்டு யாப்பு சொல்லி கொடுத்திருந்தாங்கன்னா,

இன்னிக்கு எத்தனை பேர் சூப்பர் மரபுக் கவிஞராய் வந்திருப்பாங்க!!)

No comments:

Post a Comment