தமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு

இன்றைய 'தமிழ்நாடு மாநிலம்' அன்று 'மதராஸ் மாகாணம்' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்படி கூப்பிடவே கூடாது அதனை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றுங்கள் என்று கூறி நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த போராளி தியாகி சங்கரலிங்கனார் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவியது. காங்கிரஸ் கட்சிக்கு கொதிநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது.ஒவ்வொரு தலைவராக சங்கரலிங்கனாரை நோக்கி ஓடிவந்தனர். உண்ணாவிரதம் வேண்டாமே நிறுத்தி கொள்ளுங்கள் என்று ம.பொ.சிவஞானம், காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என பல தலைவர்கள் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத சங்கரலிங்கம், இறுதியாக அறிஞர் அண்ணாவிடம், "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன் என்றவர், ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?" என்று ஏக்கத்துடன் கேட்டார்.


76-வது நாள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சங்கரலிங்கனாரின் உயிரும் நம்மைவிட்டு பிரிந்தது. அப்போது அவருக்கு 78 வயது.
தமிழ்நாடு மாநிலம் என பெயர் மாற்றம்கோரி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் மறைவும் தமிழக அரசியலில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பிலும் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'மதராஸ் மாகாணம்' என்ற பெயரை 'தமிழக அரசு' என பெயர் மாற்றி வரலாறு படைத்தது. 

அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது வரலாறு.

தமிழ்நாடு பெயர் பெற்ற கதை - விளக்க வரலாறு 

மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வித்திட்டவர் தியாகி சங்கரலிங்கனார் .தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரிக்கைக்காக உண்ணாவிரதத்திலயே உயிர் துறந்த சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அண்ணா முதல்வரானதும் உயிரூட்டினார் . 1967ம் ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு பிறந்த கதையை விவரிக்கிறது.

உயிர் பெரிதன்று, மானமே பெரிது” என்ற லட்சிய முழக்கத்தோடு ''மெட்ராஸ் ஸ்டேட்'' என்ற மாநில பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.

விருதுநகரை சேர்ந்த சங்கரலிங்கனார் காந்தியின் தண்டியாத்திரையில் பங்கேற்றவர், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் .  இந்நிலையில் தான் மொழி வழி மாநிலம் அமைக்கவேண்டும், சென்னை மாகாணம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும், ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகர் தேசபந்து திடலில் 1952 ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தை சங்கரலிங்கனார் தொடங்கினார். 

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன், ம.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். அதன்பின்னர் 1957ம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து 127 வாக்குகள் பதிவாகின. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வியடைந்த நிலையில் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஷ் குப்தா தமிழ்நாடு  பெயர் மாற்றம் கோரி தனி தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் .

இதனை ஆதரித்து  அண்ணா தமிழ்நாடு என ஏன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் .  ஆனால் அந்த தனித் தீர்மானம் நிறைவேறவில்லை.

காமராஜருக்கு பிறகு பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் திமுக தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை கொண்டு வந்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்றால் அனைவருக்கும் பரிட்சயம் , தமிழ்நாடு என்பதை இனிதான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .

சர்வதேச அரங்கிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரே அனைவரிடமும் அறியப்பட்டுள்ளது என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுப்ப்பட்டு விவாதத்தோடே அந்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. 1967 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று  திமுக ஆட்சியை பிடித்து அண்ணா முதல்வரானார் . அப்போது தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியதாக அன்றைய அவைத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தார் . தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் ம.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் முயற்சிகளையும்  நினைவு கூர்ந்தார் முதலமைச்சர் அண்ணா.

அண்ணா ''தமிழ்நாடு'' என்று சட்டமன்றத்தில் மூன்று முறை முழங்க உறுப்பினர்கள் ''வாழ்க'' என்று ஓங்கி குரல் எழுப்பினார்கள். அந்த குரல் காற்றில் கரைந்து சட்டமன்றத்துக்கு எதிரே இருக்கும் வங்க கரையில் உணர்ச்சிப் பொங்க எதிரொலித்தது.

#தமிழ்நாட்டின்கதை #தமிழ்நாடு #சென்னைமாகாணம் #சென்னை #அண்ணா #சங்கரலிங்கனார்

Post a Comment

0 Comments