இந்திய அரசியலமைப்புச் சட்டம் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் வெற்றிப்பெற

Author:  பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
Day 7 : அடிப்படை சாசனம்

இந்தியாவில் எந்தப் போட்டித் தேர்வு எழுதுவதாக இருந்தாலும், ஒரு பகுதி மட்டும் கட்டாயமாக நன்கு படித்துக்கொண்டு போக வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தனை சிறப்பு இடம் இதற்குத் தரப்படவில்லை.

ஆனால், இப்போது தனிப் பாடமாக, தனிப் பகுதியாகவே மாறிவிட்டது. எளிய பகுதி; ஏராளமான மதிப்பெண்.இந்திய அரசமைப்பு சட்டம்!

1950 ஜனவரி 26 அன்று செயல்பாட்டுக்கு வந்தது நமது சாசனம்.  அதனால்தான் அந்த தினம், குடியரசு தினம் ஆனது.

ஆனால் இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 1949 நவம்பர் 26 அன்றே இந்தச் சட்டத்தை அரசியல் சாசன அமர்வு ஏற்றுக்கொண்டு, ஒரு சில பிரிவுகள் அன்றைக்கே அமலுக்கும் வந்துவிட்டன.

 ஆம். அரசியல் சாசனத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினம் – 26 நவம்பர் 1949. முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்த தினம்தான் – 26 ஜனவரி 1950.

அரசியல் சாசனம் ஏதோ ஒரே நாளில், சிலர் கூடிப் பேசி உருவாக்கியது அல்ல. 1946 டிசம்பர் 9 அன்று, அரசமைப்புக் குழு (Constituent Assembly) முதன் முறையாகக் கூடியது. டாக்டர் ராஜேந்திர பிரசாத், இக்குழுவின் தலைவராக இருந்தார். இந்தக் குழு, 1947 ஆகஸ்ட் 29 அன்று, டாக்டர் அம்பேத்கர் தலைமையில், அரசியல் சாசன வரைவுக் கமிட்டியை நிறுவியது.

இந்தக் கமிட்டி வழங்கிய சட்ட வரைவை, 1949 நவம்பர் 26 அன்று, அரசமைப்புக் குழு ஏற்றுக்கொண்டது. சாசனத்தின் ஒரு சில பிரிவுகள், அன்றைய தினமே செயல்பாட்டுக்கும் வந்தன.


அரசியல் சாசனம் – நான்கு பகுதிகள் கொண்டது எனலாம்.

1. முகப்புரை. (Preamble)

2. பிரிவுகள் / விதிகள். (articles)  - மொத்தம் 395.

3. திருத்தங்கள். (amendments) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன.

4. அட்டவணைகள் (schedules) மொத்தம் 12.

முகப்புரை தொடங்கி அட்டவணைகள் வரையில் அனைத்துமே மிக முக்கியம். இந்த நான்கு பகுதிகளில் இருந்துமே கேள்விகள் வரலாம். ’‘நாம் ஆகிய இந்திய மக்கள்…’’ (’’We, the people of India..’’) என்கிற வாசகம் மிகப் பிரபலம்.

இந்திய அரசமைப்புச் சட்ட, முகப்புரையின் முதல் வாசகம் இது. முகப்புரை ஒன்றும் நீளமானதெல்லாம் இல்லை. சுமார் ஒரு பக்கம் அளவிலேயே உள்ளது. முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.

காரணம், சாசனத்தின் ஜீவன், உயிர் நாடி இது. முகப்புரை பல முக்கிய கோட்பாடுகளை முன் வைக்கிறது. இது காட்டுகிற வழியில்தான், இந்தியா, ஒரு ’ஜனநாயகக் குடியரசு’ என்கிற பெருமையுடன் திகழ்கிறது.

‘ஜனநாயகம்’ என்றால், மக்கள் தேர்வு செய்கிற அரசு என்று பொருள். ‘குடியரசு’ என்றால்…? சட்டத்தின் மாட்சிமை பொருந்திய அரசு. அதாவது, எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும், சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட முடியும்.

எந்தத் தனி நபரையும் விட சட்டம் பெரியது. இந்தியாவில் உள்ள எல்லாச் சட்டங்களுக்கும் தாய் – அரசியல் சாசனம். ஆகவேதான் அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டே யாரும் எதுவும் செய்ய முடியும் என்கிறோம். இந்தக் கட்டுப்பாடுதான், ‘குடியரசுத் தத்துவம்’ ஆகும்.

நமது அரசியல் சாசனம் இதுவரை, 101 திருத்தங்களைக் கண்டு இருக்கிறது. ‘ஜி.எஸ்.டி.’ சட்டம், 101ஆவது திருத்தம் ஆகும். மேலும் பல திருத்தங்கள், ‘விவாதம்’ (அ) ‘அறிமுகம்’ என்கிற நிலையிலேயே இருக்கிறது.

அதாவது, இது தொடர்பான கோரிக்கை, நாடாளுமன்றத்தில் வைக்கப் பட்டு நிலுவையில் உள்ளது. இன்னமும் சில / பல படிகள் கடந்து, நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.

திருத்தங்களில் 42ஆவது, 44ஆவது என்று சில மட்டும் முக்கியமானவை. ஓரிரு நிமிடங்கள் செலவிட்டால் போதும். படித்துத் தெரிந்து கொண்டு விடலாம். ’அட்டவணை’ என்பது, பட்டியல்தான்.

மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பட்டியல் இடுகிறது ஒரு அட்டவணை; இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியல் இடுகிறது மற்றொரு அட்டவணை. எவ்வெந்தப் பட்டியலில் என்னென்ன இருக்கின்றன…? ஒருமுறை படித்து வைத்தால் நல்லது. எளிதில் மதிப்பெண் பெறுகிற பகுதி இது.

அடுத்து, சாசனத்தில் உள்ள பிரிவுகள். அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படும் முறை.. எல்லாமே மிக முக்கியமான பகுதிகள். ‘வழிகாட்டி’ புத்தகங்கள் எல்லாம், அரசியல் சாசனம் பகுதிக்கு, சரி வராது. ’கேள்வி – பதில்’ வடிவில், படிக்கிற பகுதி அல்ல இது.

’இந்திய அரசமைப்புச் சட்டம்’ - தமிழில் பல பதிப்புகள் உள்ளன. ஏதேனும் ஒன்றை வாங்கி முழுதாகப் படிக்கலாம். புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமானது அல்ல.

சட்டப் பிரிவுகள் மட்டுமல்ல; அவற்றுக்கான எளிமையான விளக்கப் புத்தகங்கள் கூட, தமிழில் ஏராளமாகக் கிடைக்கின்றன.

முகப்புரை தொடங்கி ஒவ்வொரு பிரிவையும் வரிசையாக, அட்டவணைகள், திருத்தங்கள் வரை, சாசனம் மொத்தமும் படித்து முடிக்க, ஓரிரு நாள்கள் போதும்.

படிக்கும் போதே முக்கியமான அம்சங்களைக் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.தேர்வு, மதிப்பெண், தேர்ச்சி, வேலை… எல்லாம் தண்டி, ஒவ்வோர் இளைஞரும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய, அடிப்படை அறிவு சர்ந்த பகுதி – அரசமைப்புச் சட்டம்.

இத்தொடரில் இது குறித்து விரிவாகப் பார்க்கத்தான் போகிறோம். அதற்கு முன்னதாக சில வினாக்களைப் பார்ப்போமா…?

ஆளுநரை நியமிப்பவர் யார்? (குரூப்4 – 2014)                                     

A) நீதிபதி  B) பிரதமர்  C) முதல்வர்  D) குடியரசுத் தலைவர். (விடை D)

எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மிருக்கு, தனி அரசியலமைப்பை வழங்குகிறது?

A) 370 B) 390  C) 161  D) 356. (விடை A)

மேற்சொன்ன வினாக்கள், மேலோட்டமாகப் பார்த்தால், கடினமானதாகத் தோன்றலாம். உண்மையில், இவை மிக எளிமையானவை. பிறகு ஏன் கடினமாக உணர்கிறோம்?வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட படித்திராத பகுதியிலிருந்து எந்தக் கேள்வி வந்தாலும் கடினமாகத்தானே தோன்றும்..? இதுதான் பிரச்னையே.

மற்றபடி யாரும் எளிதில் முழு மதிப்பெண்ணைப் பெற முடிகிற பகுதிகளில் இதுவும் ஒன்று. குரூப்4 தேர்வில் நமக்கு உள்ள மிகப் பெரிய ஆதாயமே, எந்தப் பகுதியிலும் ஆழமாக ‘உள்ளே நுழைந்து’ கேட்கப்படுவது இல்லை.பிறகு ஏன் கலவரப்பட வேண்டும்…?

 thanks and source : vikatan.com

Post a Comment

0 Comments