TNPSC குரூப் 4 தேர்வுக்கு மொழி பாடங்களை எப்படி படிக்கலாம்? |

மற்ற போட்டித் தேர்வுகளைக் காட்டிலும் TNPSC போட்டித்தேர்வு மிக எளிமையானது. ஏனென்றால் எந்தெந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும் என Syllabus கொடுத்து நடத்தப்படும் ஒரே தேர்வு டி.என்.பி.எஸ்.சி தேர்வு மட்டுமே. அதிலும் Group 4 தேர்வு மிக மிக எளிதானது. பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்பதால் அதற்கு தயாராவது மிக சுலபம். எனவேதான் TNPSC EXAM - ல் வெல்வது மிக மிக எளிது. TNPSC தேர்வில் எளிதாக வெற்றிப் பெற மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம் என தெரிந்துகொள்வோம்.

தேர்வுக்கு தயாரவதற்கு முதல் படியாக TNPSC EXAM Syllabus டவுன்லோட் செய்து, அதில் இருப்பவற்றை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்வதுதான்.

சிலபஸ்சில் இருக்கும் பாடங்களில் மொழிப்பாடங்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ் மொழி பாடங்களை படிப்பது அவ்வளவு கடினம் இல்லை. பாடத்திட்டத்தில் உள்ளபடி பாடங்களை படித்து முடிக்க வேண்டும். அவைகள் அனைத்துமே ஏற்கனவே பத்தாம் வகுப்பு வரை படித்த பாடங்கள்தான். எனவே படிப்பதற்கு அதிக கடினமாக எதுவும் இருக்காது.

பாடப்புத்தகங்களைத் திரட்டுவது

ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்கள் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் நண்பர்களுடன் குழுவாக இணைந்துகொண்டு, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வகுப்ப பாடப்புத்தங்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் புத்தகம் திரட்டும் வேலை குறையும்.

பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதால், ஒவ்வொருவரும் பாடம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். இதனால் ஒருவருக்கொருவர் படித்த விஷயங்கள் மற்றவர்களுக்கு எளிதாக சென்றடையும். அதே நேரத்தில் இவ்வாறான கலந்துரையாடலால் பாட பகுதிகள், கேள்வி - பதில் மறக்காமல் இருக்கும்.

எந்தப் பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும்…? அதாவது, சமச்சீர் கல்விப் பாடங்களா…? ’சென்ட்ரல் போர்ட்’டின் NCERT புத்தகங்களா….?  பதிவிறக்கம் செய்த பாடத் திட்டத்தைப் பார்ப்போம். அதில் உள்ள பகுதிகள் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ, அதை வாங்கிப் படிப்போம். பொதுவாக, சமச்சீர் கல்விப் புத்தகங்கள்தாம், தமிழ் மொழித் தாளுக்குப் பயன்படும். ஆங்கிலம் தேர்வு செய்தவர்களுக்கு, NCERT புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுப் பாடப் பிரிவைப் பொறுத்த மட்டில், இந்தப் பிரச்னை பெரிதாக எழ வாய்ப்பு இல்லை. காரணம், இவை எல்லாம், அறிவுசால் பாடங்கள். அதாவது, சூத்திரம் (formula), தேற்றம் (theory) வாய்ப்பாடுகள் (tables) வரைபடங்கள் (maps) ஆகியவற்றின் அடிப்படையில் விடை அளிக்க வேண்டிய பகுதிகள். இவை எல்லாம் பிரபஞ்ச பாடங்கள். (universal subjects) எல்லாப் பாடத் திட்டங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மாறவே போவதில்லை. அறிவியல், கணிதம் மட்டுமல்ல; சரித்திரம், பூகோளம் உட்பட எல்லாப் பாடங்களும் இப்படித்தான்.

எந்தப் பாடத் திட்டமாக இருந்தாலும், 1947 ஆகஸ்ட் 15 அன்றுதானே, இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும்…? தமிழ்நாட்டுக்கு வடக்கேதானே டெல்லி இருக்க முடியும்…? என்ன தெரிகிறது….? மொழிப் பாடங்களும் ’அறிவு’ பாடங்களும், முற்றிலும் வேறுவேறு வகையைச் சேர்ந்தவை. இந்த வேறுபாட்டை நாம் நன்கு உணர்ந்தால்தான், இவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதில் நமக்கே ஒரு தெளிவு பிறக்கும்.

சரி… எப்படி படிக்கலாம்….?

மொழிப் பாடங்களைப் படிக்கிறபோது, படிக்கிறபோதே நமக்கு விளங்கி விடும். ஞாபகம் வைத்துக்கொள்வதும்கூட, கடினமாக இருக்காது. இதுவே, பிற பாடங்களைப் படிக்கிறபோது, கருத்துரு (concept) பிடிபட வேண்டும். அப்போதுதான் அடுத்த படிக்குச் செல்ல முடியும். இதுதான் நமது தயாரிப்பில் மிக முக்கியம். பள்ளித் தேர்வுகளின்போது எப்படியோ ‘குருட்டாம் போக்கில்’ (மன்னிக்கவும்) நினைவில் கொண்டு எழுதிவிட்டு வந்து இருப்போம். போட்டித் தேர்வுகளில் இந்த அணுகுமுறை சரி வராது. இங்கே ஆனால், ‘கான்செப்ட்’ புரிந்துகொண்டு படித்தால்தான், தேர்வில் எளிதாக, சரியாக விடை அளிக்க முடியும். இதில் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

‘கான்செப்ட்’ மட்டும் சரியாப் புரிந்து… சரியாப் பிடிச்சுட்டாப் போதும்… ‘பின்னி எடுத்துடலாம்’.

இந்தப் பகுதிக்கு, பிறகு வருவோம். இப்போது நாம் காண இருப்பது – நம் தாய்மொழி – தமிழ்!

 சரியானதும் பொருத்தமானதும்
முதன் முறையாகப் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது என்ன….? சில கேள்விகளுக்கு, சரியான பதில் கேட்கிறார்கள்; சிலவற்றுக்கு ஆனால், பொருத்தமான விடை தரச் சொல்கிறார்கள்.  ஏன் இப்படி…? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்…?

இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் எது? இக்கேள்விக்கு ‘சரியான’ பதில், நம் எல்லாருக்கும் தெரியும் – 15 ஆகஸ்ட் 1947.

இதுவே, மகாத்மா காந்தியின் ஆகச் சிறந்த குண நலம் எது?

1) சுறுசுறுப்பு 2) கடின உழைப்பு 3) தலைமைத்துவம்  4) அகிம்சையில் நாட்டம்.

இந்த வினாவுக்கு ‘பொருத்தமான’ விடை – அகிம்சையில் நாட்டம். எல்லாமே சிறந்த குணநலன்கள் என்றாலும், அவற்றுள் எது மிகச் சிறந்தது என்று கூறுதல். அதாவது தரப்பட்டு இருக்கும் நான்கு விடைகளுமே சரியானதுதான்; அவற்றுள் ஒன்றை, சீர் தூக்கிப் பார்த்து, நம்முடைய கருத்துப்படி எது மிகப் பொருத்தமாகத் தோன்றுகின்றதோ, அதனைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு இரு வகை வினாக்களில், பொருத்தமானதைத் தேர்வு செய்வது எளிமையானது. காரணம், எதையும் நினைவில் வைத்துக் கொண்டு, பதில் தர வேண்டியது இல்லை. கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல், நடுநிலையுடன் சிந்தித்தாலே போதும்; பொருத்தமானதைத் தேர்வு செய்து விட முடியும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, இந்த குணம்தான் மிக இன்றியமையாதது. யாரையும் ‘வேண்டியவர்’, ‘வேண்டாதவர்’ என்று பாகுபடுத்திப் பார்க்காமல், விதிமுறைகளின் படி கடமை ஆற்ற வேண்டும். இத்தகைய அணுகுமுறை வளர்வதற்கு, ‘பொருத்தமானதை’ தேர்வு செய்கிற பயிற்சி, நன்கு துணை புரியும். சரிதானே..? பொருத்தமானதுதானே…?

இனி நாம், மொழித் தாளுக்குள் நுழைவோம். தமிழ் அல்லது ஆங்கிலம் எதுவாக இருந்தாலும், மொழித் தாள் என்றாலே, பாடம், செய்யுள், இலக்கணம் என்று மூன்று பகுதிகள் இருக்கவே செய்யும். இம்மூன்று பகுதிகளுக்குமே, தெளிவாக வரையறுக்கப்பட்ட, பாடத் திட்டம், தரப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் நாம் நம்மைத் தயார் செய்து கொள்கிறபோது, குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது என்ன…?  பள்ளி வகுப்புகளில், தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள், இயல்பாகவே, போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட முடிவிலும், நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, அருஞ்சொற்பொருள், மனப்பாடப் பகுதி ஆகியன இடம் பெற்று இருக்கும். இதில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப் படுகின்றன.

இதிலே, அருஞ்சொற்பொருள் பகுதியில், பாடத்தில் இடம் பெற்ற கடினமான சொற்களுக்கு பொருள் / விளக்கம் தரப் பட்டு இருக்கும். இது, மிக முக்கியம். இதே போலத்தான் நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு உள்ளிட்ட, பிற நான்கு பகுதிகளும். ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் படித்து வைத்துக் கொண்டால் தேர்வின் போது வசதியாக இருக்கும்.

எந்த மொழியிலுமே பிழையின்றி பேசுதல், எழுதுதல் – மிக முக்கியம். போட்டித் தேர்வுகளில், ‘பிழை நீக்கம்’ – மதிப்பெண்களை அள்ளித் தருகிற ஒரு பகுதி. ஒருமை, பன்மை வேறுபாடு, கால நிலை (அதாவது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) குறிக்கும் சரியான வினைச் சொற்கள், கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்புடன் ஒலிக்கும் வெவ்வேறு சொற்கள் (உ-ம்: வேழம்; வேடம்) பிறமொழிக் கலப்பு (இன்று ’ஸ்கூல்’ இருக்கிறதா..?) போன்றவை இவற்றில் சில இனங்கள்.

ஆங்கில மொழித் தாளிலும், முதலில் சொன்ன இரு இனங்கள் இருக்கும். பொதுவாக, ஆங்கிலத்தில் பிறமொழிக் கலப்பு இடம் பெறுவதில்லை! ஆங்கிலத்தில் இல்லாத, தமிழில் மட்டுமே இருக்கும் இன்னொரு அம்சம் – பாலின வினைச் சொற்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறி வருகிற வினைச் சொற்கள்.

‘அவன் சென்றான்’; ’அவள் சென்றாள்’.

இந்த வேறுபாடு மிக எளிமையானதுதான். ஆனால் இதன் மீதும் குரூப்4 தேர்வில் கேள்விகள் வருவது உண்டு. பிரபலமான பழமொழிகளும் மேற்கோள்களும் மொழித் தாளில் அதிகம் இடம் பெறுகின்றன. ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா…?’, ‘பட்ட காலிலே படும்’ போன்று பல நூறு பழமொழிகள் தமிழிலே உண்டு. இவை எல்லாவற்றையும் ‘மனப்பாடம்’ செய்து கொண்டு இருக்க வேண்டாம். இயல்பாக இம்மொழிகளை அவ்வப்போது பயன்படுத்தி வந்தாலே, மொழி வளம் தானாக வந்து விடும். அதற்கெல்லாம், இப்போது எங்கே நேரம் இருக்கிறது…?

குரூப்4 தேர்வுக்கு முன்னதாக இந்த ஒரு மாதத்தில் என்ன செய்யலாம்…?

கவலைப்பட வேண்டாம். கேள்வித்தாளில் ஒரு பழமொழி கொடுத்து, அதற்கான பொருள் கேட்கிறார்கள். இதிலே இரண்டு வகைகள் உண்டு. ஒன்று – பழமொழி வாசகம் மட்டும் தந்து, அதற்கு அர்த்தம் வினவுவது. ‘ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா…?’ கீழ்க்கண்டவற்றுள் இதன் பொருளை சரியாக உணர்த்துவது எது…? நான்கு விடைகள் தரப்பட்டு இருக்கும். இது ஒருவகை. இரண்டாவது, பழமொழி இடம் பெற்ற முழு வாசகமும் தந்து, பொருள் கேட்பது. ’வாராது போல் வந்த மாமணியாய்’ நமக்கு வாய்த்தார் பாரதி.  ‘அபூர்வமாய்’ என்கிற பொருளை உணர்த்துகிற மேற்கோளைக் கொண்ட, முழு வாசகமும் இடம் பெற்று இருக்கிறது.

இவ்விரு வகைகளில் சரியான விடை காண என்ன செய்யலாம்…?

முதல் வகையில், தரப்பட்டு இருக்கும் பழமொழியைக் கொண்டு நாமாக ஒரு வாக்கியம் அமைத்துப் பார்க்கலாம். ‘அரண்டவன் கண்ணுக்கு’ என்று மட்டும் இருக்கிறது. இந்த மொழியை முழுவதுமாகச் சொல்லிப் பார்த்தால், பொருள் தானாக விளங்கி விடும். ‘மிரள’ வேண்டிய அவசியம் இருக்காது. அடிப்படையற்ற அச்சம் எழாது. இரண்டாவது வகையா…? இன்னும் சுலபம். பழமொழி / மேற்கோள் இருக்கும் இடத்தில், அதனை நீக்கி விட்டு, நான்கு விடைகளையும் பொருத்திப் பார்த்தால், சரியானது எதுவென்று சட்டென்று புரிந்து விடும். முயற்சி செய்து பாருங்கள்; ’சூட்சுமம்’ விளங்கும்.

தமிழில் மிகப் புகழ் பெற்ற புலவர்கள், அவர்களின் படைப்புகளில் பிரபலமான படைப்புகளில் இருந்து, ஓரிரு வினாக்களை எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்…’ என்று பாடிய கவிஞர் யார்…? (இதே கேள்வி, மீண்டும் மீண்டும் பலமுறை, பல தேர்வுகளில் இடம் பெற்று இருக்கிறது). திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், பாரதியார் / பாரதிதாசன் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் தவறாமல் இடம் பெறுகின்றன. ஒருமுறை சற்றே ’பார்த்து விட்டு’ செல்வது நல்லது. மொழித் தாளின் கடினமான பகுதிகளுக்குப் பிறகு வருவோம்.

Day 4:  ஊரைத் தெரிஞ்சிக்குவோம்!
‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்; உலகம் தெரிஞ்சிக்கிட்டேன்…’ என்று யாரால் உரக்கச் சொல்ல முடிகிறதோ அவருக்கு, போட்டித் தேர்வுகளில் சுமார் 10 மதிப்பெண்கள் உறுதி ஆகி விட்டது. ஆம். பூகோள அறிவு நிரம்ப உள்ளவர்கள், 4 (அ) 5 கேள்விகளுக்கு ‘கண்ணை மூடிக் கொண்டு’ பதில் சொல்லி, மதிப்பெண்களை அள்ளலாம்.

வரலாறு பகுதியைப் போலவேதான், பூகோளமும். உலகம், இந்தியா, தமிழ்நாடு என்று மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். புவியியலைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் சற்றே, ‘உலகளாவிய’ பார்வையும் தேவைப் படுகிறது. இந்திய அளவில் நின்று விடுவதில்லை.

TNPSC Group IV

இளைஞர்களுக்கு ஒரு யோசனை:

உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழக வரைபடம் ஆகிய மூன்றையும் வாங்கி, நன்கு கண்ணில் படும்படி, வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துக் கொள்ளவும். நாள்தோறும் சில மணித் துளிகள், வரைபடத்தைப் பார்த்து வந்தாலே போதும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லி விட முடியும். ‘மேப் ரீடிங்’, அறிவு வளர்ச்சிக்கு, மிகவும் ஆரோக்கியமான பயிற்சி. பொது அறிவு மேம்பட வேண்டும் என்று கருதுபவர்கள் எல்லாரும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இது எந்த அளவுக்கு, போட்டித் தேர்வுகளில் பயன் தரும்?

‘காவிரி ஆறு, தமிழ்நாட்டில் எவ்வெந்த மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது?’

இந்தக் கேள்விக்கு உரிய பதிலை, ‘மனப்பாடம்’ செய்து வைத்துக் கொள்ளலாம். அல்லது, தமிழக வரைபடம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரண்டாவதுதான் மிக எளிய வழி. காரணம், காணொளியாக (visual) ஒரு விஷயத்தைப் பார்க்கிற போது, நன்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். வரைபடம் பார்க்கிற வழக்கம் இருந்தால், இதுபோன்ற கேள்விகள், எத்தனை எளிதாக இருக்கும்…? (’காவிரி’ கேள்விக்கு என்ன பதில்..? மன்னிக்கவும். வரைபடம் பாருங்கள்). தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், மலைகள், காடுகள், ஏரிகள், குளங்கள், கோயில்கள், தொழிற்சாலைகள்… பட்டியலை ஒருமுறை படித்து, வரைபடத்திலும் பார்த்து வைத்துக் கொண்டால், பிரசினையே இல்லை.

இதே போல், மற்றொரு பகுதி, பருவ காலங்கள். வட கிழக்கு, தென் மேற்குப் பருவம் பற்றிய தகவல்கள் மிக முக்கியம். மே, ஜூன், ஜூலை மாதங்களில், கேரளாவை ஒட்டிய, மேற்கு மாவட்டங்களில் தென் மேற்குப் பருவம்; அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்களில் வட கிழக்குப் பருவம். இதுதான் தமிழ் நாட்டுக்கான இரண்டு, பருவ மழைக்காலம். நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடலை, மலர்கள், கனிகள்… எங்கெங்கு அதிகம் விளைகின்றன…. தமிழகத்தில் உள்ள அணைக்கட்டுகள், நீர்ப்பாசன வசதிகள், மண் வகைகள் தொடர்பான தகவல்கள்.

தமிழக விவசாயம் பற்றி போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப் படுகின்றன. இவையும் அன்றி, பல்வேறு தொழில்கள், சந்தைகள் பற்றிய பூகோள செய்திகள்.உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில், எவ்வெத் தொழில்கள் எங்கெல்லாம் அதிகம் காணப் படுகின்றன…? ’tannery’ எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் (வேலூர் மாவட்டம்); நெசவுத் தொழில் (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள்); பட்டு நெசவு (காஞ்சிபுரம்) மீன்பிடித்தல், உப்பளங்கள் (கடலோர மாவட்டங்கள்) போன்ற, புவியியல் சார்ந்த பொருளாதார மண்டலங்கள்.

2014ஆம் ஆண்டு குரூப்4 தேர்வில், இந்திய அளவில் பயிர் உற்பத்தி பற்றி, கேட்கப் பட்ட வினா இது -

சரியாகப் பொருத்துக:

(a) அரிசி உற்பத்தி   -       1. பஞ்சாப் & அரியானா

(b) கோதுமை உற்பத்தி –    2. கூர்க் & நீலகிரி.

(c) சணல் உற்பத்தி   -      3. உத்தரப் பிரதேசம் & மேற்கு வங்கம்.

(d) காப்பி தோட்டங்கள்  -   4. மேற்கு வங்கம் & அசாம்.

மேலோட்டமான பூகோள அறிவு இருந்தாலே இக்கேள்விக்கு பதில் சொல்லி விடலாம். காப்பித் தோட்டங்கள், கூர்க் & நீலகிரியில் அதிகம்; சணல் என்றாலே, மேற்கு வங்கமும், அசாமும்தான்; உ.பி.யில் அரிசியும்; பஞ்சாபில் கோதுமையும்.

இதே ஆண்டில் வந்த இன்னொரு கேள்வி –

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்

(A) கொச்சி

(B) கொல்கத்தா

(C) மும்பை

(D) விசாகப்பட்டினம். 

(விடை – D)

மற்றொரு வினா – சரியான விடையைப் பொருத்துக:-

(a) மொகஞ்சதோரா       -    1. குஜராத்.

(b) காளிபங்கன்           -    2. பஞ்சாப்.

(c) லோத்தல்              -    3. இராஜஸ்தான்

(d) ஹரப்பா                -    4. சிந்து.

(விடை:  a - 4 b - 3 c - 1  d – 2)

க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?

(A) ஜியார்ஜியா

(B) பெளாரஸ்

(C) ரஷ்யா

(D) லத்வியா.

(விடை- ரஷ்யா)

பெரிய ஏரிகளில் (Great Lakes) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது? (2014 குரூப்4)

(A) சுப்பீரியர் ஏரி.

(B) மிச்சிகன் ஏரி.

(C) ஒன்டாரியோ ஏரி.

(D) ஹரான் ஏரி. 

(விடை – C)

பொதுப் பாடத்தில் உள்ள 100 கேள்விகளில், 4 (அ) 5 வினாக்கள் பூகோளப் பாடத்தில் இருந்து இடம் பெறலாம். ஓரிரு மணி நேரம் செலவிட்டால் போதும்; புரிந்து கொள்ளாத முடியாதபடி எதுவும் இல்லை; பூகோளத் தகவல்களும் எளிதில் கிடைக்கும். இது போன்ற ஆதாயம் வேறு எந்தப் பகுதிக்கும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் சில கேள்விகள் இடம் பெறுவது அதிகரித்து வருகிறது. வரவேற்கத்தக்க ஆரோக்கியமான மாற்றம்தானே…?

சமீப காலமாக பள்ளிப் புத்தகங்களில், ’சுற்றுச் சூழல்’ தனியான பாடமாகவே கூட தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. இந்தப் பகுதிகளை ஒருமுறை படித்தாலும் போதும். குரூப்4 தேர்வுக்குப் பயன்படும். தேசிய நெடுஞ் சாலைகள், ரெயில்வே இருப்புப் பாதைகள் ஆகியனவும், பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய பகுதியாக இருந்து வருகிறது.

ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை? (2014 குரூப் 4)

(A) சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்.

(B) சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி.

(C) மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி.

(D) சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா. (விடை – D)

இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள், அதற்கான காரணங்கள், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அரசின் பார்வையில் இருந்து, தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை குறித்த எதிர்மறைச் செய்திகள், போட்டித் தேர்வு, குறிப்பாக குரூப்4க்குத் தேவையில்லை. மிக அதிக பட்சம் போனால், 8 முதல் 10 மணி நேரம்; பூகோளத்தில் தேவையான அளவுக்கு தயாராகி விடலாம். 

Post a Comment

0 Comments