வினைத்தொகை கண்டறிவது எப்படி?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?


பொதுவாக தொகை சொற்களில் இரண்டும் சொற்கள் இருக்கும்.
(எ.கா) வினைத்தொகை - ஊறுகாய்
பண்புத்தொகை - செந்தாமரை (செம்மை+தாமரை

வினைத்தொகையில் இருசொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

ஊறிய காய் - இறந்தகாலம்
ஊறுகின்ற காய் - நிகழ்காலம்
ஊறும் காய் - எதிர்காலம்

இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப் போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா)
1) படர்கொடி

படர்ந்த கொடி- இறந்தகாலம்
படர்கின்ற கொடி- நிகழ்காலம்
படரும் கொடி- எதிர்காலம்

2) சுடுசோறு

சுட்டசோறு - இறந்தகாலம்
சுடுகின்றசோறு - நிகழ்காலம்
சுடும்சோறு - எதிர்காலம்

3) குடிநீர்

குடித்தநீர்- இறந்தகாலம்
குடிக்கின்றநீர்- நிகழ்காலம்
குடிக்கும்நீர்- எதிர்காலம்

கொடுக்கப் பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப்பாருங்கள். இரண்டும் சொற்கள் வராத விடையை நீக்கி விடுங்கள். முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று பாருங்கள்.

ஒரு விடை மட்டும் தான் முக்காலத்தையும் உணர்த்தும். மூன்று தவறான விடைகள் பெயரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம். தவறான விடைகளை புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம்.

Post a Comment

0 Comments