Saturday, December 19, 2015

TNPSC GK HISTORY : டெல்லியை ஆண்ட ஒரே பெண்மணி

இன்று இந்தியாவின் தலைநகரமாகவும் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் விளங்கும் டெல்லி மாநகரை ஆண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி யார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

      முகமது கோரியின் கீழ் தனது வாழ்க்கையை அடிமையாக தொடங்கி டெல்லியின் முதல் சுல்தானாக பதவி ஏற்றவர் குத்புதீன் ஐபக்.அவர் ஆரம்பித்ததுதான் அடிமை வம்சம்.  இவர் ஒரு வீரம் மிக்க போர் வீரராகவும் , நிர்வாகத்திறமை கொண்ட அரசராகவும், வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்தார்.லக்பாக்‌ஷா(இலட்சங்களை அள்ளிக் கொடுப்பவன்) என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னர் இவர்.இவரது மருமகன் இல்டுமிஷ்.இவர் ஐபக்கின் மகன் அராம் என்பவரை தோற்கடித்து டெல்லி சுல்தான் ஆனார்.

     இந்தியாவை நோக்கி மங்கோலியப்படைகள் முன்னேறிய போது அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு இந்தியாவைக் காப்பாற்றினார் . இதனால் முதலில் இவரது தலைமையை விரும்பாத பலரும் இவரது நிர்வாகத்திறமைக் கண்டு ஏற்றுக்கொண்டனர்.

குத்புதீன் ஐபக் கட்ட ஆரம்பித்து கட்ட முடியாமற்போன குதுப்மினாரை இல்டுமிஷ் வியக்கும் வண்ணம் கட்டி முடித்தார்.இன்றும் குதுப்மினார் இவர்களின் வரலாற்றைச் சொல்லிக்கொண்டு நிற்கிறது.இவரின் மகன்கள் நிர்வாகத்திறமை அற்றவர்களாக இருந்ததால் தனக்குப்பிறகு தனது மகள் ரஸியா பேகம் டெல்லியின் அரசியாக வேண்டும் என விரும்பினார்.


இரஸியா பேகம்:


      அதன்படி இல்டுமிஷின் மறைவுக்குப்பின் ரஸியா பதவி ஏற்றார்.மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆட்சித்திறமை பெற்றவரான ரஸியா பேகம்தான் டெல்லியை ஆண்ட ஒரே இஸ்லாமியப் பெண்மணி என்ற சிறப்பினைப் பெற்றவர்.அவர் ஆட்சிக்காலத்தில் ஏராளமான எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது.போர்த்திறமையும் அறிவுக்கூர்மையும் கொண்ட ரஸியா தன் நாட்டு மக்கள் மீது பற்றுடன் இருந்தார்.போர்க்காலங்களில் தானே தலைமையேற்று போரிடுவார்.

ஒரு பெண்ணின் தலைமையில் தாங்கள் பணி புரிவது கேவலம் என்று அவரது தளபதிகள் நினைத்தனர்.எனவே அவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.ஜார்கிண்ட் பகுதி ஆளுநரான அல்தூனியா ரஸியாவை தோற்கடித்தார்.அதன் விளைவாக அல்தூனியாவை மண்முடித்துக்கொண்டார் ரஸியா.ஆனால் ரஸியாவுக்கு எதிராக அவருடைய பிரபுக்கள் தொடர்ந்து கலகம் செய்தனர்.

அல்தூனியாவினால் கூட அவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை.ரஸியாவை பிடிக்காத பிரபுக்கள் அவரை தந்திரமாக கைது செய்து பின் அவரைக் கொன்றனர்.ஒரு வீரமிக்க இஸ்லாமியப் பெண்மணியின் துணிச்சலான ஆட்சியை காலம் வெகு விரைவில் இழந்தது.

-மதுமதி

No comments:

Post a Comment