Thursday, July 26, 2012

தமிழ் இலக்கணம் - 2

வணக்கம் நண்பர்களே..! கடந்த பதிவில் இலக்கணத்தின் வகைகள் எத்தனை? அவை என்னென்ன என்பதைப் பற்றிப் பார்த்தோம். ஐந்து இலக்கண வகைகளில் முதலில் இடம்பெற்றிருப்பது எழுத்திலக்கணம்.

ஆம் நண்பர்களே.. எந்த ஒரு மொழியாயினும் தவறின்றி எழுத எழுத்துகள் முக்கியம். எழுத்துகள் இடம்மாறிப்போனால் அந்த வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும். அதுவும் தமிழில் ஒத்த ஓசையுடைய பல்வேறு எழுத்துகள் இருக்கிறது. உதாரணத்திற்கு ண,ன, ஆகிய எழுத்துகளை எடுத்துக்கொள்வோம்.


இதில் முதல் எழுத்து நன்றி என்பன போன்ற சொல்லில் வரும்.. மனம் என்னும் சொல்லில் இரண்டு சுழி "ன" வகையே வரவேண்டும். அதற்கு பதிலாக மூன்று சுழி"ண" வகையை பயன்படுத்தினோம் என்றால் முழு பொருளும் மாறிவிடும். இவ்வாறு எழுத்துகள் வார்த்தைகளுக்கு தகுந்தவாறு அமைத்து எழுதப் பழக வேண்டும்.. இத்தகைய விதிகளைச் சொல்வதுதான் எழுத்திலக்கணம்.


எழுத்துகளை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.

எழுத்துகளின் வகைகள்: 

முதலெழுத்துகள்: 

மொழியில் முதலாவதாக வரக்கூடியதும் தனித்து இயங்கக்கூடியதும் ஆகிய எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம். அதாவது அரிச்சுவடியில் இருக்கிற அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துகளும் எழுத்துகளும் நெட்டு வரிசையில் க முதல் ன வரை உள்ள 18 மெய்யெழுத்துகளும் கூடிய மொத்தம் 30 எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம்.

சார்பெழுத்துகள்: 

சார்பெழுத்துகள் என்பது முதலெழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளாகும். இச் சார்பெழுத்துகள் தனித்து இயங்காது. எனவே தான் இவற்றை சார்பெழுத்துகள் என்கிறோம். அதாவது முதலெழுத்துகளைச் சார்ந்து பின்தொடர்ந்து வருவதால் இவற்றை சார்ப்பெழுத்துகள் என்கிறோம்.
 இச்சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். இவற்றைப் பற்றி முழுமையாக அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

உயிரெழுத்துகள்: 

உயிரெழுத்துக்கள் என்பது மொழிக்கு உயிராய் இருப்பது. தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் 12 என்பதை முன்னரே பார்த்தோம். அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் உயிரெழுத்துகள் என அழைக்கப்படுகிறது.

மெய்யெழுத்துகள்:

தமிழ் மொழிக்கு மெய்யாக இருப்பது மெய்யெழுத்துகள். 'மெய்' என்றால் உடம்பு என பொருள்படும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பவை மெய்யெழுத்துகளாகும்.

அடுத்தப் பதிவில் சார்பெழுத்துகளின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment