டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா ! - வழிகாட்டி !

இதோ… அழைப்பு மணி விடுக்கப்பட்டுவிட்டது. அரசுப் பணியை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டீர்களா….?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்த இருக்கும் குரூப்-4 தேர்வு, தமிழக இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் மிக நல்ல வாய்ப்பு. 2018 பிப்ரவரி 11 ஞாயிறு அன்று நடைபெற உள்ள குரூப்-4 தேர்வு மூலம் சுமார் 10,000 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு அளவில் எளிய தேர்வு; பணி இல்லாப் பிரச்னைக்கு இனிய தீர்வு.

நாம் செய்ய வேண்டியது எல்லாம்…. அடுத்த சில நாள்களுக்கு, நன்கு திட்டமிட்டு, நம்மைத் தயார் செய்துகொள்வதுதான். நன்றாக கவனத்தில் கொள்வோம் – தயார் 'செய்வது’ அல்ல; தயார் 'செய்து கொள்வது’. அழகு செய்வது; அழகு செய்து கொள்வது – இரண்டுக்கும் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்தானே…? அதுவேதான் இங்கும்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு, நமக்கு நாமே எப்படித் தயார் செய்து கொள்வது…? முதலில், இது சாத்தியமா…? நம்புவோம். சத்தியமாக...இது சாத்தியம்தான். சரி. என்ன செய்ய வேண்டும்…? எங்கிருந்து தொடங்கலாம்…? ஓர் அடிப்படைத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மட்டுமல்ல; அரசுப் பணிக்கான எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலுமே, நாம் தொடங்க வேண்டிய இடம் – பள்ளிப் பாடப் புத்தகங்கள்தாம். பட்டம் முடித்து, அதற்கும் மேல் படித்து, வரிசையாகக் கல்வித் தகுதிகளை அடுக்கி வைத்து இருக்கலாம். ஆனாலும், நல்ல நிலையான அரசுப் பணியில் சேர வேண்டும் என்றால், பள்ளிப் பாடங்களில் ஆழ்ந்த அறிவு கட்டாயம் இருந்தாக வேண்டும்.

ஆகவே, நாம் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறை இதுதான்:

1. ஆரம்பகட்ட ஆயத்தங்கள்:
முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் முறையாக முழுமையாகப் படிக்கவும். நினைவிருக்கட்டும். மேலே சொன்னது, அறிவுரை அல்ல; வழிமுறை.  சரி. ஆறாம் வகுப்பில் இருந்து படித்தால் போதாதா…? அது ஏன்… ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும்…? கொஞ்சம் ‘ஓவரா’ தெரியுதே….? கேள்வி நியாயம் ஆனதுதான். ஆனால், முதல் வகுப்பில் இருந்து கேள்வி வந்து, நம்மால் சரியாக பதில் சொல்ல முடியாமல் போனால்…? ‘சான்ஸே இல்லை..’ என்கிறீர்களா…? மகிழ்ச்சி. ஆனால்…….

இந்தக் கேள்வியைப் பாருங்களேன்…

யானையின் குரலுக்கு, தமிழில் என்ன சொல்கிறோம்…? ‘பிளிறுதல்’.

இந்தச் சொல் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது…? கடந்த ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில், இதை ஒட்டிய வினா, இடம் பெற்று இருக்கிறது.  பத்தாம் வகுப்புப் பாடம் மறந்து போகிறபோது, முதல் வகுப்புப் பாடம் மட்டும் அப்படியே நினைவில் இருக்குமா என்ன…? ’அது கூடவா தெரியாமல் போகும்…?’ தெரியாமல் எல்லாம் இல்லை; நினைவுக்கு வராமல் போகலாம். அதற்குத்தான் சொல்வது.

அது சரி…. முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களைப் படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது…?

‘சரி.. விட்டுட்டுப் போங்க.. பார்த்துக்கலாம்….’ என்று, எந்தச் சலுகையும் நாம் வழங்க முடியாது.. காரணம், போட்டித் தேர்வுக்குத் தயார் செய்து கொள்கிறபோது, அத்தகைய மனப் போக்கு வரவே கூடாது.

’முடிஞ்ச வரைக்கும், எல்லாத்தையும் படிக்கணும்…’ இந்த மனநிலைதான், போட்டித் தேர்வில் வெற்றியை உறுதி செய்யும். ஆம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் படிக்கிறோமோ… அவ்வளவும் நமக்கு நல்லது. என்ன தெரிகிறது….? போட்டித் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், எந்தத் தகவலையும் ‘தேவையில்லை’ என்று தள்ளிவிட முடியாது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, இரண்டு பாகங்களைக் கொண்டது.

1. மொழித்தாள்.

2. பொதுப்பாடத் தாள். (General Studies) 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொது அறிவு (G.K) என்று இருந்தது. தற்போது பெயர் மாறி இருக்கிறது. அதற்கேற்ப, அதன் வடிவம், உள்ளீடு மாறிவிட்டது. இரண்டு பாகங்களிலும் தனித்தனியே 100 கேள்விகள்; ஆக மொத்தம் 200 வினாக்கள். ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண்கள். மொத்தத்தில் 300 மதிபெண்கள். தவறான விடைக்கு ‘பெனால்டி’ அதாவது ‘மைனஸ்’ மதிப்பெண்கள் கிடையாது. இதன் பொருள், தெரிகிறதோ இல்லையோ, எல்லாக் கேள்விகளுக்கும் ஏதாவது ஒரு விடையை ‘டிக்’ செய்து விட வேண்டும். ஒருவேளை, ’நமக்கே தெரியாமல்’ சரியான பதிலைத் தேர்வு செய்து இருந்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்குமே…..!

ஆக, அடுத்த வழிமுறை தெரிந்து விட்டது –

‘பதில் தெரிகிறதோ இல்லையோ, எல்லா 200 கேள்விகளுக்கும், ஏதாவது ஒரு விடையைக் குறித்துவிட வேண்டும்’.

நன்றி: ஆனந்த விகடன்
ஆசிரியர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Post a Comment

0 Comments