கடற்பயணம் - TNPSC General Tamil - டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன்
தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.

ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.

தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த  பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.

பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.
ஒவ்வொரு பெரிய கப்பலும் மதில்சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றுமாம்.

அஃதாவது, நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள். அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்:

ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி

மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் :

கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்

ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும்.
கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.

புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

 காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகியவை குறிப்பிடத்தக்க துறைமுகங்கள்

முசிறி, சேர மன்னர்க்குரிய துறைமுகம்.
யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, அகநானூறு தெரிவிக்கிறது.

பாண்டிய நாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ குறித்துள்ளார்.

ஏற்றுமதிப்பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன.

விளைந்து முதிர்ந்த விழுமுத்து என மதுரைக்காஞ்சி கூறும்.
கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.
அவ்வூர்களில் பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள்.

சோழநாட்டின் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்), சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

 பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன.

இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கவை.

தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.

Post a Comment

0 Comments