Sunday, May 21, 2017

சாதி பிரிவு இல்லாத தால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள்

அரசு பணி நியமனங்களை மேற்கொள்ளும், டி.என்.பி.எஸ்.சி., இணையதள பதிவில், இரண்டு ஜாதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது. உறுப்பினர்கள் நியமனம் முதல், தேர்வு நடத்துவது வரை, டி.என்.பி.எஸ்.சி.,யில் குழப்பங்கள் தொடர்கின்றன.

தற்போது, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், இரண்டு ஜாதிகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குரூப் - 2 ஏ, நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளில், 1,953 காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஏப்ரல், 24ல், அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி கடைசி நாள். எனவே, தேர்வர்கள் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., யின், ஒவ்வொரு தேர்வரும் தங்கள் சுய விபரங்களை, இணையதளத்தில், ஒரு முறை பதிவு என்ற, ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும். இதில், கல்வித்தகுதி, முகவரி, மதம், ஜாதி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறும்.

இந்த தேர்வுக்கு, பெரம்பலுார், அரியலுார், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களின், பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த, நத்தமன் மற்றும் மலையமன் என்ற, இரண்டு ஜாதிகளின் பெயர்களும், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இருந்து, திடீரென நீக்கப்பட்டுள்ளன.

அதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், ஏற்கனவே பட்டியலில் இருந்த, தங்கள் ஜாதி பெயர் திடீரென மாயமானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து தேர்வர்கள் கூறுகையில், 'சில குறிப்பிட்ட ஜாதியை மட்டும், டி.என்.பி.எஸ்.சி., திடீரென நீக்கியது ஏன்; அதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'மேலும், விடுபட்ட ஜாதியை உடனே பட்டியலில் சேர்த்து, விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment